×

பெற்றோரை தவிக்கவிடுபவரை சமுதாயம் உயர்வாக கருதாது

திருச்சி, அக்.31: உலக முதியோர் தினம் திருச்சி ஒய்.டபிள்யூ.சி.ஏ. கூட்டரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திருச்சி கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து பேசியதாவது: உலக முதியோர் தினம் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. முதியோர் நலமாக இருக்க மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்கிவருகின்றன. நிதியுதவி பெற்று தொண்டு நிறுவனங்கள் முதியோர் இல்லங்களை சிறப்பாக நடத்த வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 24 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பெற்றோர்களையும், மூத்த குடிமக்களையும் பாதுகாப்பது வாரிசுகளின் அடிப்படை கடமையாகும். பெற்றோரை பராமரிக்கவில்லை எனில் வாரிசுகள் செய்ய வேண்டிய அடிப்படை கடைமைகளை சட்டம் சுட்டிக்காட்டும்.

பெற்றோர், தான் பெற்றெடுத்த பிள்ளைகளை எவ்வளவு பரிவோடும், பாசத்தோடும், பராமரித்து பாதுகாத்து வளர்த்து நல்ல குடிமக்களாக வளர்த்தார்களோ அதே வகையில் அப்பெற்றோர்களை பராமரித்து பாதுகாப்பது பிள்ளைகளின் கடமையாகும். பெற்றோரை தனியாக தவிக்கவிடும் ஒருவர் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் அவரை உயர்ந்தவராக இந்த சமூதாயம் கருதாது’ என்றார். முன்னதாக 90 வயதிற்கு மேல் உள்ள முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. காதுகேளாத 7 பேருக்கு தலா ரூ.5,840 மதிப்பிலான காதொலிக்கருவி வழங்கப்பட்டது. டாக்டர் வேணுகோபால் முகாம் அமைத்து கண் பரிசோதனை செய்தார். மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசா, திருச்சி ஆர்டிஓ அன்பழகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : parent ,
× RELATED தும்மனட்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி